Tuesday, 3 December 2013

போலி சான்றிதழ் மூலம் ஆசிரியர் பணி: 8 பேர் சஸ்பெண்ட்

போலி சான்றிதழ்கள் மூலம் ஆசிரியர் பணியில் சேர்ந்த 8 பேரை சென்னை மாநகராட்சி கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பணிபுரியும் பல இடைநிலை ஆசிரியர்கள் போலி சான்றிதழ்கள் மூலம் பணியில் சேர்ந்ததாக மாநகராட்சிக்கு புகார் வந்தது. இதனையடுத்து மாநகராட்சி விழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் விசாரணை செய்து வந்தனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக ஏராளமான ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் சோதனை செய்யப்பட்டன. இதில் 8 ஆசிரியர்களின் சான்றிதழ்கள் போலியானவை என்று உறுதி செய்யப்பட்டது. இப்போது இவர்கள் 8 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: சென்னை மாநகராட்சி இடைநிலை ஆசிரியர்கள் பலர் போலி சான்றிதழ்கள் மூலம் பணியில் சேர்ந்துள்ளதாக வந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதல் கட்ட விசாரணை விவரங்கள் சென்னை காவல்துறையினரிடம் அளிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக காவல்துறையிடம் புகாரும் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து குப்பன், ராஜா, முருகன் என்ற மூன்று ஆசிரியர்களை போலீஸார் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைது செய்தனர்.
அடுத்தகட்டமாக சத்தியவேணி, எழில்மாறன், சுகுமாறன், சக்திவேல், தினகரன் ஆகிய 5 ஆசிரியர்களும் போலி சான்றிதழ்கள் மூலம் பணியில் சேர்ந்தை மாநகராட்சி அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதனையடுத்து, ஏற்கனவே கைதான 3 ஆசிரியர்கள் மற்றும் தற்போது கண்டறியப்பட்ட 5 பேர் என மொத்தம் 8 பேரை மாநகராட்சி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் திருமண நிதியுதவி வழங்க லஞ்சம் கேட்ட புகாரின் பேரில் 2 மாநகராட்சி குடும்ப நல அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட சத்தியவேணி, எழில்மாறன், சுகுமாறன், சக்திவேல், தினகரன் ஆகியோர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment