Thursday 11 July 2013

திண்டுக்கல்லை சேர்ந்த தலைமை ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 28 ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருப்பவர்களை உயர்த்தும் வகையில் ஆசிரியப் பணியை நேசித்து செய்தததற்கு, கிடைத்த மகத்தான பரிசு இது என்று பெருமிதம் கொள்கின்றனர் அவரது குடும்பத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம், வேம்பார்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் செல்வ சரோஜா. செப்டம்பர் மாதம் 5-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருது இவருக்கு வழங்கப்பட உள்ளது.
7 வயதிலேயே தந்தையை இழந்து தனது தாயாரின் முயற்சியால் சிரமங்களுக்கிடையே படித்து ஆசிரியப் பணியில் சேர்ந்து சிறந்த சேவையாற்றியுள்ளார் இவர். சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு உரிய கல்வியை அளிப்பதே அவர்களின் வாழ்க்கையை மேம்படச் செய்யும் என நம்புவதாகக் கூறுகிறார் செல்வ சரோஜா.
மாணவர்களுக்கு கல்வி அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களை சமூக நோக்குள்ளவர்களாக உருவாக்குவதிலும் இவரின் பங்களிப்பு இருந்திருக்கிறது. மாணவ, மாணவிகள் மூலம் ஆயிரம் மரக்கன்றுகளை நடும் பணியையும் இவர் தலைமையாசிரியராக இருந்து முன்னின்று நிறைவேற்றியிருக்கிறார்.
இப்படி பல்வேறு பணிகளிலும் ஈடுபட்ட செல்வ சரோஜாவின் பணியை அங்கீகரித்துப் பாராட்டுத் தெரிவிக்கும் விதமாக தமிழக அரசு கடந்த 2010-ம் ஆண்டு இவருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவித்துள்ளது. தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகுந்த பெருமிதம் தருவதாகக் கூறுகின்றனர் இவரது தாயும், கணவரும்.
பணிபுரியம் காலத்தில் கூடை பின்னுதல், டிசைன் பூக்கள் மற்றும் மாலை தயாரித்தல் உள்ளிட்ட கைத்தொழில் பயிற்சிகளையும் மாணவர்களுக்கு அளித்து வந்துள்ளார் இவர். ஓய்வு பெற்ற நிலையில் இனி வரும் காலங்களில், தாய் தந்தை இல்லாத குழந்தைகளுக்கு படிப்பதற்கு உதவி செய்ய விரும்புவதாய் விருப்பம் தெரிவிக்கிறார் இந்த தேசிய விருதுப் பெண்மணி.news by puthiyathalaimurai

No comments:

Post a Comment