Tuesday 9 July 2013

ஆர்வமுள்ளவர்கள் நிச்சயமாக அறிவியலுக்கு வரலாம்-09/07/2013









வழக்கம்போல் இந்த ஆண்டும் பிளஸ் 2 தேர்வில் மாநில ரேங்க் பெற்ற மாணவர்களில் பெரும்பாலானோர் மருத்துவராக விரும்புவதாகவும், பொறியியல் படிப்பில் சேர விரும்புவதாகவும் தங்கள் விருப்பங்களை மகிழ்ச்சியோடு வெளிப்படுத்தினர். சிலர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக சேவை செய்ய விரும்புவதாகவும் கூறினர். ஆனால், அறிவியல் படிக்க யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை.
நமது நாட்டில் பெற்றோர், மாணவர்கள் மத்தியில் அறிவியல் படிப்புகள் தொடர்பான விழிப்புணர்வைப் பார்க்கும்போது இது ஆச்சரியமளிக்கவில்லை. சிறந்த மாணவர்கள் எல்லாம் அறிவியலுக்கு வராமல் பொறியியல், மருத்துவம், மேலாண்மை பக்கம் சென்றுவிட்டால் இந்திய அறிவியல் நிறுவனங்கள் நீரற்ற பயிர் போல வாடிவிடும். நாட்டு முன்னேற்றத்தை மனதில் வைத்து சிறந்த மாணவர்கள் அறிவியலை நோக்கி வர வேண்டும் என்று அறிவியலாளர்கள் அழைக்கின்றனர்.
அறிவியல் படிக்கத் தாராளமான உதவித் தொகைகள், புதிய கல்வி நிறுவனங்கள், புதிய துறைகள், வேலைவாய்ப்புகள் என அறிவியல் படிப்புகளும் மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்கும் என்றும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
ஐசர் கல்வி நிறுவனங்களில் தொடங்கி உள்ளூர் கல்லூரிகள் வரை ஏராளமான கல்வி நிறுவனங்களில் பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் படிப்புகளைப் படிக்க கல்வி உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன.
அந்தந்த வாரியத் தேர்வுகளில் முதல் 1 சதவீத மதிப்பெண் எடுத்த மாணவர்கள் (டாப் 1), அறிவியல் படிப்புகளைத் தேர்ந்தெடுத்தால் அவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.80 ஆயிரம் கல்வி உதவித் தொகை இன்ஸ்பயர் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. பி.எச்டி. படிப்பு வரை இந்த உதவித் தொகையும், அதன் பிறகும் வேலைவாய்ப்பும் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
நாடு முழுவதும் 10 ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதேபோல், கே.வி.பி.ஒய். உள்ளிட்ட அறிவியல் படிப்பதற்கு தாராளமான உதவித் தொகைத் திட்டங்கள் நிறையவே உள்ளன.
அறிவியல் படித்தவர்களுக்கு என்னென்ன வேலைவாய்ப்புகள்?இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் காரணமாக தொடங்கப்படும் புதிய பள்ளிகளில் அறிவியல் ஆசிரியர்களுக்கு வேலை கிடைக்கும்.
புதிதாக 30 மத்திய பல்கலைக்கழகங்கள், 8 ஐ.ஐ.டி.க்கள், 20 என்.ஐ.டி.க்கள், 20 ஐ.ஐ.ஐ.டி.க்கள், 3 ஐசர் கல்வி நிறுவனங்கள், 7 ஐ.ஐ.எம்.கள் ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன.
தேசிய சராசரிக்கும் குறைவாக உயர் கல்வி பயிலும் மாணவர்கள் உள்ள 373 மாவட்டங்களில் மத்திய அரசு உதவியுடன் கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன. இங்கெல்லாம் அடிப்படை அறிவியலில் பி.எச்டி. படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பல்கலைக்கழகங்களில் 1,102 பேராசிரியர் பணியிடங்கள், 2,312 ரீடர் பணியிடங்கள், 5,101 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்தியாவில் உயர்கல்வி துறையில் சுமார் 40 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் தரமான உயர்கல்வி அளிக்க சுமார் 30 ஆயிரம் பி.எச்டி. பெற்ற ஆசிரியர்கள் தேவை. எனவே அடிப்படை அறிவியலில் பி.எச்டி. பட்டம் பெறுபவர்களுக்கு உயர் கல்வித் துறையில் ஆசிரியர்களாகும் வாய்ப்பு சிறப்பாக உள்ளது.
ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய துறைகள்: அறிவியல் ஆய்வாளர்கள் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளின் ஆய்வு மாதிரியைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு, நமது உள்நாட்டுச் சூழலுக்கு ஏற்ப தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஏற்படுத்த வேண்டும். ஆய்வுகளில் அடிப்படையான சுகாதார பிரச்னைகளுக்கும், ஆதாரமான விவசாயத்துக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
காசநோய், மலேரியா போன்ற நோய்களுக்கு புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். அறிவுசார் இணைப்பு, மரபுசாரா எரிசக்தி, சூரிய மின்சக்தி ஆகியவை தொடர்பான ஆராய்ச்சி, நீர் ஆதார மேம்பாடு போன்ற பல்வேறு சவால்கள் நம்முன் உள்ளன.
ஒரு காலத்தில் பெருமையுடன் விளங்கிய அறிவியல் ஆய்வுக் கூடங்கள் எல்லாம் இப்போது அழிவின் விளிம்பில் உள்ளன. புதிய, புதிய துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்ளவும், இந்தியாவின் மின்சக்தி பிரச்னையைத் தீர்க்கவும் ஆர்வமுள்ள மாணவர்கள் நிச்சயம் ஆராய்ச்சிக்கு வர வேண்டும்.
90 ஆயிரம் விஞ்ஞானி பணியிடங்கள்: உலக அறிவியல் ஆய்வு இதழ்களில் இப்போதுள்ளதைவிட இரண்டு மடங்கு அதிகமாக ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தும் ஆய்வுகளை 4 மடங்காக ஆக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்ற 90 ஆயிரம் விஞ்ஞானி பணியிடங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும்.
புதிய துறைகள், புதிய பணிகள்: அறிவியல் படித்தால் பல துறைகளில் வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன. விவசாய தொழில் மற்றும் அகுவா கல்ச்சர் பணிகளுக்கு அடிப்படை அறிவியல் பட்டமும், அதன் பிறகு துறைசார்ந்த உயர் கல்வி பெற்றவர்களும் தேவை. விவசாயத் தொழில் என்பது நிலங்களில் வேலை செய்வது மட்டுமல்ல  விதை உற்பத்தி நுணுக்கங்கள் போன்றவையும் விவசாயம்தான்.
பதப்படுத்தப்பட்ட உணவு என்பது நகரமயமாக்கலின் தொடர்ச்சியாக பெருகும்போது ஹோம் சயின்ஸ், உணவு மற்றும் உணவு பதப்படுத்தும் அறிவியல் சார் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் வானவியல் ஆய்வுக் கூடங்கள் மிக வேகமாக வளர்ந்து வரும் துறைதான். புதிய ஆய்வுக் கூடங்கள் அதிக எண்ணிக்கையில் வர இருக்கின்றன.
உயிரியல் சார்ந்த பயோ-கெமிஸ்ட்ரி, பயோ-இன்ஃபர்மேடிக்ஸ், பயோ-ஸ்டாடிஸ்டிக்ஸ் போன்ற துறைகளும் வளர்ந்து வருகின்றன. பயோ-டெக்னாலஜி, மருந்தியல் ஆராய்ச்சி போன்ற துறைகளில் இந்தப் படிப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டு.
அமெரிக்கன் மேத்தமேட்டிக்கல் சொசைட்டி கணிதம் சார் வேலை வாய்ப்புகளை பட்டியலிடும்போது அனிமேஷன், ஆகாய விமானத்தை வடிவமைத்தல், இன்டர்நெட் தகவல் தொடர்பை சீரமைத்தல், டிஎன்ஏ மூலக்கூறின் ரகசியம் அறிதல், வானிலை தொடர்பாக அறிதல், சந்தை நிலவரம் குறித்து கணித்தல் என பற்பல நவீன வேலைவாய்ப்புகள் குறித்தும் கூறுகிறது.
கடலிலிருந்து மின்சாரம், கடல் வாழ் உயிரினங்களிடமிருந்து மருந்து என பல புதிய துறைகள் வந்துகொண்டிருக்கின்றன. எனவே ஓஷனோகிராபி எனப்படும் கடல் சார் அறிவியலும் வாய்ப்புள்ள துறைதான்.
எலக்ட்ரானிக்ஸ் குறித்து நாம் ஏற்கெனவே அறிவோம். இயற்பியல் மாணவர்கள் இந்தத் துறையில் சிறப்பாக வர முடியும். போட்டோனிக்ஸ் எனப்படும் ஒளியியல் எலக்ட்ரானிக்ஸ் அடுத்த தலைமுறைப் புரட்சியை படைக்கும் என்கின்றனர். தடய அறிவியல், வன உயிரியல், செடி, தாவரங்களை வளர்க்கும் துறை, பயிர் நோய்களை ஆய்வு செய்யும் துறை என அறிவியல் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது.
இவ்வளவு வாய்ப்புகள் உள்ள அறிவியல் துறையை தேர்ந்தெடுப்பதன் மூலம் நமது வாழ்வில் முன்னேற்றத்தை காண்பதுடன், ஆராய்ச்சிகளின் மூலம் சமூகத்துக்கும் நம்மால் இயன்றதை செய்ய முடியும்.---THANKS FOR DINAMANI                                                                         

No comments:

Post a Comment