Friday 12 July 2013

கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சீட் கொடுக்க பள்ளிகள் மறுப்பு

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், 56,682 இடங்கள் இருந்த போதும், 18,946 இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன. இது, 33.42 சதவீதம். 1,012 தனியார் பள்ளிகள், ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ், ஏழை குழந்தைகளுக்கு, "சீட்' கொடுக்க மறுத்துள்ளன. "இந்த பள்ளிகள் மீது, விரைவில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய அரசு, 2009ல், 14 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், எட்டாம் வகுப்பு வரை, இலவச மற்றும் கட்டாய கல்வி அளிக்க, சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி, சிறுபான்மையினர் அல்லாத மற்ற அனைத்து வகை தனியார் பள்ளிகளும், சேர்க்கை நிலை வகுப்பில் (எல்.கே.ஜி., அல்லது ஆறாம் வகுப்பு) உள்ள மொத்த இடங்களில், 25 சதவீத இடங்களை, ஏழை, எளிய, சமுதாயத்தில் நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். குழந்தைகளுக்கான கல்விச் செலவை, தமிழக அரசிடம் இருந்து, பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த சட்டம், தமிழகத்தில், நடப்பு கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட்டது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக, ஆர்.டி.இ., சட்டம் குறித்தும், அதன் பல்வேறு அம்சங்கள் குறித்தும், கல்வித் துறை, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அதிகாரிகள், ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் உட்பட, பல தரப்பினருக்கும், சட்டத்தை பற்றி விளக்கியதுடன்,

சட்டத்தை அமல்படுத்த வேண்டிய முறைகள் குறித்தும், அதிகாரிகளுக்கு, பல்வேறு கட்டங்களில் கல்வித் துறை விளக்கி கூறியது. முக்கியமாக, தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களை அழைத்து, மாவட்ட வாரியாக கூட்டங்களை போட்டு, அதிகாரிகள் விளக்கி கூறினர். எனினும், கல்வியாண்டு துவக்கத்தில், பெரிய தனியார் பள்ளிகள், ஆர்.டி.இ., ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பம் வழங்குவதை, இருட்டடிப்பு செய்தன. மேலும், இந்த ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க, பல பெற்றோர் தயங்கவும் செய்தனர். மற்றொரு பக்கம், பல பெற்றோருக்கு, ஆர்.டி.இ., இட ஒதுக்கீடு குறித்த விவரங்களும் தெரியாத நிலை இருந்தது. இதன் காரணமாக, 3,737 தனியார் பள்ளிகளில், 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள, 56,682 இடங்களில், 18,946 இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன; இது, 33.42 சதவீதம். 1,012 தனியார் பள்ளிகள், "சீட்' கொடுக்க மறுத்துள்ளன. "இந்த பள்ளிகள் மீது, துறை ரீதியாக, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழக அரசு தகவல்:


""இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், நடப்பு கல்வியாண்டில், 18,946 மாணவர், தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்,'' என, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர், பிச்சை தெரிவித்து உள்ளார்.

அவரது அறிவிப்பு:


நலிவுற்ற மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கு, சிறுபான்மையினர் அல்லாத, தனியார் சுயநிதி பள்ளிகளில், நுழைவு நிலை வகுப்புகளில், 25 சதவீத இடங்கள் வழங்க, இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தில், வழி வகை செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில், ஆர்.டி.இ., இட ஒதுக்கீட்டின் கீழ், மாணவ, மாணவியர் சேர்வதற்கு வசதியாக, தனியார் பள்ளிகளில், விண்ணப்பங்கள் வழங்கவும், மாணவரை சேர்க்கவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கடந்த மே, 9ம் தேதி வரை, 6,128 மாணவர் சேர்ந்தனர். பொதுவாக, மாணவர் சேர்க்கை, மே, ஜூன் மாதங்களில், அதிகம் நடைபெறும். இதை கருத்தில் கொண்டும், ஆர்.டி.இ., ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர் எண்ணிக்கை, குறைந்த அளவில் இருந்ததை கருத்தில் கொண்டும், இந்த பிரிவின் கீழ் மாணவர் சேர்வதற்கான காலக்கெடு, ஜூன், 20ம் தேதி வரை, நீட்டிப்பு செய்யப்பட்டது. மேலும், சில பள்ளி நிர்வாகங்கள், விண்ணப்பங்களை அளிப்பதில், சுணக்கம் காட்டுவதாக, அவ்வப்போது தகவல் பெறப்பட்டதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமே விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்க, பெற்றோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக, காலக்கெடு நீட்டிப்பு காரணமாக, கூடுதலாக, 12, 818 மாணவர்கள், ஆர்.டி.இ., இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்தனர். மொத்தத்தில், நடப்பு கல்வி ஆண்டில், 18, 946 மாணவர், இந்த இட ஒதுக்கீட்டின் கீழ், தனியார் பள்ளிகளில் சேர்ந்து, பயனடைந்து உள்ளனர். இவ்வாறு, பிச்சை தெரிவித்துள்ளார்.

சட்டத்தை ஏமாற்றிய சி.பி.எஸ்.இ., பள்ளிகள்:


தமிழகத்தில், 400க்கும் அதிகமான சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், வெறும், 119 பள்ளிகள் மட்டுமே, ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ், ஏழை குழந்தைகளுக்கு, "சீட்' வழங்கியுள்ளன. மற்ற பள்ளிகள் குறித்து, எவ்வித தகவலும் தெரியவில்லை. சிறுபான்மை பள்ளிகள் தவிர, மற்ற அனைத்து வகை பள்ளிகளும், ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ் வருகின்றன. அதன்படி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சில ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் ஆகியவை, சட்டத்தின் கீழ் வருகின்றன. மாநிலத்தில், 400க்கும் அதிகமான சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 123 பள்ளிகள் குறித்த விவரங்கள் மட்டுமே, கல்வித் துறைக்கு கிடைத்துள்ளன. இதில், நான்கு பள்ளிகள், 25 சதவீத இடங்களை வழங்க மறுத்துள்ளன. மீதமுள்ள, 119 பள்ளிகள் மட்டும், 1,025 இடங்களை ஒதுக்கீடு செய்துள்ளன. 300க்கும் அதிகமான பள்ளிகள், கல்வித் துறை கண்களில் இருந்து, தப்பித்தது எப்படி என்பது, புரியாத விந்தையாக உள்ளது. இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""சி.பி.எஸ்.இ., பள்ளிகள் குடுமி, எங்களிடம் இல்லை. கல்விக் கட்டணம் நிர்ணயம் மற்றும் ஆர்.டி.இ., சட்டம் போன்றவற்றில் மட்டும், தமிழக அரசு தலையிட முடியும். மற்றபடி, பெரிய அளவில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளை கட்டுப்படுத்தவோ, விதிகளை மீறும்போது, நடவடிக்கை எடுக்கும் அதிகாரமோ, எங்களிடம் இல்லை,'' என, தெரிவித்தார். ஆர்.டி.இ., சட்டத்தை அமல்படுத்தாத மற்றும் "சீட்'டுகளை ஒதுக்க முன்வராத சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மீது, சென்னை மண்டல அதிகாரி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கல்வித் துறை வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன.

- நமது நிருபர் -BY DINAMALAR        12/07/2013

No comments:

Post a Comment