Sunday 4 August 2013

உங்கள் திறனுக்கு ஏற்ற வேலையைத் தேர்ந்தெடுங்கள்

இந்தியாவில் இன்ஜினியரிங், மருத்துவம், வங்கி, ஆசிரியர், சட்டம், மீடியா, அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் உள்ளன. ஒவ்வொருவரும் தகுதி திறமைக்கேற்ப இந்த துறைகளை தேர்ந்தெடுக்கின்றனரா என்பது சந்தேகமே.
இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர், மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிபவர். அறிவியல் படித்தவர் வங்கிகளில் வேலை பார்ப்பர். இது போல படித்தது ஒரு துறை, வேலை பார்ப்பது ஒரு துறை என தேர்வு செய்தவர்கள் ஏராளம்.
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, வேலைவாய்ப்பு பெருகி வருவதால், எந்த துறையில் பணியில் சேர்வது என்பது போன்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன. படித்து முடித்த சில ஆண்டுகளிலேயே, மூன்றுக்கும் மேற்பட்ட துறைகளில், பணி மாறியவர்கள் உண்டு.
* தங்களின் திறன் எது என்பதை கண்டறிந்து, அதற்கு ஏற்ற பணிகளை தேர்வு செய்யலாம். அது கல்வியினால் பெற்றதாகவோ. இயற்கையாக அமைந்ததாகவோ இருக்கலாம். ஒரு துறை சார்ந்த பணியில் ஈடுபட முடிவு செய்து விட்டால், ஏற்கனவே அந்த துறையில் இருப்பவர்களிடம் யோசனை கேட்கலாம்.
* பலரும் வேலை இழப்பதற்கு காரணம், பணிபுரியும் துறையை பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளாததே. துறை சார்ந்த புதிய தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். உங்களது நேரத்திலும், பணத்திலும் 5 சதவீதத்தையாவது திறனை மேம்படுத்தும் பயிற்சிகளுக்காக ஒதுக்க வேண்டும். உங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்ற நிலை நீடிக்கும் வரை மட்டுமே, நிறுவனம் உங்களை பணியாற்ற அனுமதிக்கும்.
* எங்கு சம்பளம் அதிகம் கிடைக்கிறது என்பதை பார்த்து பணியில் சேர்வதை விட, எங்கு அதிக அனுபவம் கிடைக்குமோ அங்கு பணியாற்ற வேண்டும். அனுபவம் உடையவர்களைத் தேடி, அதிக சம்பளத்துடன் வேலை வரும். மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும், அதற்கேற்ப மாற்றிக்கொள்ளவும் தயங்கக் கூடாது. பணிபுரியும் துறையிலும், இடத்திலும் ஏற்படும் மாற்றங்கள், முன்னேற்றங்களுக்கு ஏற்றவாறு பணிபுரிபவர்களும் மாற்றிக்கொள்ள வேண்டும்.
* எந்த துறையில், முழுமையான அர்ப்பணிப்புடன் பணிபுரிய முடியும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அந்த துறை சார்ந்த வாய்ப்புகளை தேட வேண்டும். இதனால், நிறுவனம் ஆட்குறைப்பு செய்தாலும், உங்கள் வேலை பறி போகாது.
உங்களது தற்போதைய வருமானத்துக்கு ஏற்றபடி வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ளுங்கள். எதிர்காலத்துக்கு உதவும் வகையில் சேமிப்பு, முதலீடுகளை திட்டமிடுங்கள்.
சரியான துறையை தேர்ந்தெடுத்து, அர்ப்பணிப்போடு பணிபுரிந்தால், வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment