Tuesday 6 August 2013

ஆறாம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி: 900 மாணவ, மாணவிகள் சேர்க்கை By dn, காஞ்சிபுரம் First Published : 06 August 2013 12:57 PM IST

அரசு பள்ளிகளில், 6-ஆம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வியை புகுத்த அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 900 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் இந்தக் கல்வியாண்டு முதல் முதலாம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி புகுத்தப்பட்டது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆங்கில வழிக்கல்வியில் பெற்றோர் அதிகளவில் தங்களது குழந்தைகளை சேர்த்தனர். இதனால் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை சுமார் 2 ஆயிரம் வரை அதிகரித்தது.
இந்நிலையில், 6-ஆம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வியை தொடங்குவது குறித்து கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி சென்னையில் பள்ளிக்கல்வித் துறைச் செயலர் தலைமையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளோடும் தனித்தனியாக கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது இந்த கல்வி ஆண்டு முதலே நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6-ம் வகுப்பை ஆங்கில வழியில் தொடங்குவது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான பணிகள் நடைபெற்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 150 நடுநிலைப்பள்ளிகள், 47 மேல்நிலைப்பள்ளிகளில் 6-ம் வகுப்பில் இதுவரை 900 மாணவர்கள் ஆங்கில வழிக்கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2 மாதத்துக்கு பிறகு தொடங்கப்பட்டாலும், மாணவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல், படிப்பில் எந்தவித இடைவெளியும் இல்லாமல் பாடங்களை நடத்த ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment