Monday 5 August 2013

உதவிப் பேராசிரியர் நியமனம்: பணி அனுபவத்துக்கு மதிப்பெண் வழங்க புதிய விதிமுறைகள்

அரசுக் கல்லூரிகளில் 1,093 உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் பணி அனுபவத்துக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக புதிய விதிமுறைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பான மற்றுமொரு திருத்தம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பாணையின்படி, 1991-ஆம் ஆண்டுக்கு முன்பிலிருந்து 2010 ஜூன் 30 வரை பணியில் சேருவதற்கான குறைந்தபட்ச தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்தத் தகுதிக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களின் அனுபவம் அல்லது பணியில் சேர்ந்தவர்கள் இந்தத் தகுதியைப் பெற்றவுடனான பணி அனுபவம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உதவிப் பேராசிரியர்களின் கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும். அதன்பிறகு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு 1:5 என்ற வீதத்தில் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் உதவிப் பேராசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும். அரசுக் கலை அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு 1,093 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்களில் பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக 15 மதிப்பெண்ணும், கல்வித் தகுதிக்கு அதிகபட்சமாக 9 மதிப்பெண்ணும், நேர்முகத் தேர்வுக்கு அதிகபட்சமாக 10 மதிப்பெண்ணும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதில் பணி அனுபவத்துக்கான மதிப்பெண்ணைப் பொருத்தவரையில் ஒவ்வொரு ஆண்டுக்கும் 2 மதிப்பெண் வீதம் அதிகபட்சமாக 15 மதிப்பெண் வரை வழங்கப்படுகிறது. ஆனால், விரிவுரையாளராவதற்கான குறைந்தபட்ச தகுதியைப் பெற்ற பிறகு பணியாற்றிய காலம் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதில் குறைந்தபட்ச தகுதி எதுவென தெளிவாக அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், பணி அனுபவத்தைப் பொருத்தவரையில், குறிப்பிட்ட விண்ணப்பதாரர் பணியில் சேரும்போது பல்கலைக்கழக மானியக் குழு எதை குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயித்திருந்ததோ அதன்பிறகான பணி அனுபவத்துக்கு மட்டுமே மதிப்பெண் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உதாரணத்துக்கு 1991- ஆம் ஆண்டுக்கு முன்பாக முதுநிலைப் பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்ணுடன்கூடிய தேர்ச்சியே குறைந்தபட்ச தகுதியாக பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) நிர்ணயித்திருந்தது. எனவே, அப்போது பணியில் சேர்ந்தவர்களுக்கு அந்தத் தகுதியுடன் பணியில் சேர்ந்திருந்தால் அவர்களுக்கான அனுபவத்துக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு: நீதிமன்ற உத்தரவுப்படி, கீழ்க்கண்ட குறைந்தபட்ச தகுதிகளைப் பெற்ற பிறகு பணியில் சேர்ந்தவர்களின் அனுபவமோ அல்லது இந்தத் தகுதிகளைப் பெற்ற பிறகான பணி அனுபவமோ மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
1. 1991 ஆண்டுக்கு முன்பு ---முதுநிலைப் பட்டத்தில்
50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி
2. 19.09.1991 முதுநிலைப் பட்டத்தில் 55 சதவீத மதிப்பெண்ணுடன்
தேர்ச்சி மற்றும் நெட் அல்லது ஸ்லெட் தேர்வில்
தேர்ச்சி
3. 1993 முதுநிலைப் பட்டத்தில் 55 சதவீத மதிப்பெண்ணுடன்
தேர்ச்சி மற்றும் நெட் அல்லது ஸ்லெட் தேர்வில்
தேர்ச்சி. 31.12.93-க்குள் எம்.பில். முடித்தவர்களுக்
கும், அதே தேதிக்குள் பி.எச்டி. ஆய்வுகளைச்
சமர்ப்பித்தவர்களுக்கு விலக்கு.
4. 31.07.2002 முதுநிலைப் பட்டத்தில் தேர்ச்சி மற்றும் நெட் அல்லது
ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி. டிசம்பர் 31, 2002-க்குள்
பி.எச்டி. சமர்ப்பித்தவர்களுக்கு விலக்கு.
5. 14.06.2006 முதுநிலைப் பட்டத்தில் 55 சதவீத மதிப்பெண்ணுடன்
தேர்ச்சி மற்றும் நெட் அல்லது ஸ்லெட் தேர்வில்
தேர்ச்சி. எம்.பில். முடித்தவர்கள் இளநிலைப்
பட்ட மாணவர்களுக்கு வகுப்பு நடத்தவும்,
பி.எச்டி. முடித்தவர்கள் முதுநிலைப் பட்ட
மாணவர்களுக்கு வகுப்பு நடத்தவும் விலக்கு.
6. 30.06.2010 முதுநிலைப் பட்டத்தில் 55 சதவீத மதிப்பெண்ணுடன்
தேர்ச்சி மற்றும் நெட் அல்லது ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி. பி.எச்டி. முடித்தவர்களுக்கு மட்டும் விலக்கு.
40 ஆயிரம் பேர் விண்ணப்பம்
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி ஆகஸ்ட் 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சுமார் 40 ஆயிரம் பேர் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment