Tuesday 6 August 2013

ஊதியமின்றி கல்வி கற்பிக்கும் மாணவிகள்ஆகஸ்ட் 06,2013,10:34 IST

புதுச்சேரி: விழுப்புரம் அருகே, அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால், உள்ளூர் பட்டதாரி மாணவிகள் ஊதியம் இன்றி, மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியபாபுசமுத்திரம் கிராம அரசு தொடக்க பள்ளியில் 120 மாணவர்கள் படிக்கின்றனர். அங்குள்ள மூன்று ஆசிரியர்களில், ஒருவர் உயர் கல்வி படிக்கவும், மற்றொருவர் அலுவலக பணி காரணமாக வெளியூர் சென்றுவிடுவதாலும், ஒரே ஆசிரியர் பாடம் எடுக்க வேண்டிய நிலை உள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறையால், மாணவர்கள் கல்வி பாதிக்காமல் இருக்கவும், படிப்பை பாதியில் நிறுத்திவிடாமல் தடுக்கவும், அந்த கிராமத்தில் படித்து வேலையின்றி உள்ள மாணவிகள், மாணவர்களுக்கு பாடம் நடத்த முன்வந்தனர். நான்கு பட்டதாரி மாணவிகள், கடந்த ஒரு மாதமாக மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர்.
மாணவர்களுக்கு கதை கூறுதல், படம் பார்த்து கருத்து கூறுதல் உள்ளிட்ட செயல்வழி கற்றல் முறையிலும் பாடங்கள் நடத்துகின்றனர். மாணவர்களும் ஆர்வமுடம் கல்வி பயின்று வருகின்றனர். பட்டதாரி மாணவிகளுக்கு பள்ளி சார்பில் மதிப்பு ஊதியம் வழங்க பள்ளி முன்வந்தாலும், அந்த தொகையை பெற மாணவிகள் மறுத்துவிட்டனர்.
பாடம் நடத்தும் பட்டதாரி மாணவிகள் கூறுகையில், நாங்கள் இதே பள்ளியில் படித்து, பட்டதாரியாக உள்ளோம். பட்டம் பெற்றும், வேலை வாய்ப்பின்றி வீடுகளில் முடங்கி கிடந்தோம், எங்கள் ஊர் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது பெருமையாக உள்ளது. மாணவர்கள் ஆர்வமுடம் கல்வி கற்கின்றனர் என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment