Saturday 3 August 2013

எழுத்தாளர்கள், பேச்சாளர்களுக்கு களம் அமைத்துக்கொடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என்று அமைச்சர் வைகைச்செல்வன்

எழுத்தாளர்கள், பேச்சாளர்களுக்கு களம் அமைத்துக்கொடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என்று அமைச்சர் வைகைச்செல்வன் பெருமிதப்படக்கூறினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பிற்கிணங்க 2012 - 2013 ஆம் ஆண்டு முதல் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக 'இளந்தமிழர் இலக்கியப் பட்டறை' எனும் திட்டம் தொடங்கப்பட்டு இதில் ஆர்வமுள்ள இளம் எழுத்தாளர்களுக்குச் சிறுகதை, கதை, நாவல், கவிதை, பேச்சு, நிகழ்ச்சித் தொகுப்பாளர், நகைச்சுவை எனப் பல்வேறு கோணங்களில் அந்தந்தத் துறை வல்லுநர்களையும், தமிழறிஞர்களையும் கொண்டு ஒருவார காலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் 2012 - 2013 ஆம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கத்தில் 100 நபர்களுக்கு ரூபாய் 10 இலட்சம் செலவில் பயிற்சி அளிக்கப்பட்டது. இத்திட்டம் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதனால் 2013 - 2014 ஆம் நிதியாண்டிற்கு ரூபாய் 20 இலட்சம் செலவில் 200 மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுமென்று முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தார். அந்த அறிவிப்பிற்கிணங்க 2013 - 2014 ஆம் நிதியாண்டிற்கான இளந்தமிழர் பயிற்சிப் பட்டறை ஆகஸ்டு 1 முதல் 7ஆம் தேதி வரை சென்னை, அடையாறு, இந்திராநகர் இளைஞர் விடுதியில் நடைபெறுகிறது. நிகழ்ச்சியின் தொடக்க விழா நேற்றுக்காலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி, விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் முனைவர் வைகைச்செல்வன் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அமைச்சர் தனது உரையில், பேச்சு என்பது கேட்பவர்களைக் கவரக்கூடியதாகவும், தன்வயப்படுத்தக்கூடியதாகவும் அமைதல் வேண்டுமென்று குறிப்பிட்டார். வளர்ந்து வரும் பேச்சாளர், எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தவர் நமது முதல்வர் ஜெயலலிதா என்றும், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கேட்ட அனைத்துத் திட்டங்களையும் ஏற்றுக் கொண்டு பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் என்றும், தான் தமிழ் வளர்ச்சித் துறையின் அமைச்சராக இருப்பதில் பெருமை அடைவதாகவும் குறிப்பிட்டார்ாா.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் முனைவர் மூ. இராசாராம் தலைமையுரை ஆற்றினார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியின் முடிவில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் நன்றியுரையாற்றினார். 

No comments:

Post a Comment