Saturday 3 August 2013

+2வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் முதல்வரின் பரிசுத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான முதல்வரின் தகுதி பரிசுத்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த முதல் ஆயிரம் மாணவர்கள், முதல் ஆயிரம் மாணவிகளுக்கு இந்தப் பரிசுத்தொகை வழங்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பயின்ற மாணவர்களின் மேற்படிப்புக்காக ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் 5 ஆண்டுகளுக்கு இந்தப் பரிசுத்தொகை வழங்கப்படும்.
2012 மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வில் 1,069 மதிப்பெண் அல்லது அதற்குமேல் எடுத்த மாணவர்கள், 1,082 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்த மாணவிகள் இந்தப் பரிசுத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
2013 மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வில் 1,074 மதிப்பெண் அல்லது அதற்கு மேல் எடுத்த மாணவர்கள், 1,085 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்த மாணவிகள் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேற்கண்ட மதிப்பெண்ணைப் பெற்று கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் தங்களது பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நகல், ஜாதி சான்றிதழ் நகல் ஆகியவற்றுடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு தங்களது கல்லூரியின் மூலம் இந்தப் பரிசுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 2 முடித்த உடனேயோ, அல்லது ஓராண்டு இடைவெளி விட்டு மேற்படிப்பைத் தொடரும் மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
2011-12-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் இந்தப் பரிசுத்தொகையைப் பெற்று புதுப்பிக்கும் மாணவர்கள் 2012-13-ஆம் ஆண்டு முதல் ரூ.3 ஆயிரம் உதவித் தொகையைப் பெறலாம்.

No comments:

Post a Comment