Monday 4 November 2013

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: கடலோர மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை

குமரிக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஆங்காங்கே கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஞாயிற்றுக்கிழமை மாலை கன்னியாகுமரி அருகே கடலில் நிலை கொண்டுள்ளது. அது மேலும் மேற்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திங்கள்கிழமை அநேக இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய கனமழையோ பெய்யும். தமிழகம், புதுச்சேரி, கடலோர ஆந்திரா, ராயலசீமை, கர்நாடகம், தெற்கு உள் கர்நாடகம், லட்சத்தீவு உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்யும்.
சென்னையைப் பொருத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடலோரப் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும் கன மழை பெய்துள்ளது. மிக அதிகபட்சமாக ராமநாதபுரத்தில் 100 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரை முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம்(மி.மீட்டரில்):
ராமநாதபுரம் (100), மைலாடி (கன்னியாகுமரி) 90, சாத்தான்குளம், சேரன்மகாதேவி 80, திருச்செந்தூர், பாபநாசம் 70, மணிமுத்தாறு, சாத்தனூர் அணை 60 நாகர்கோவில், பாம்பன், நாங்குநேரி 50 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் போதிய மழை இல்லை:
வடகிழக்கு பருவமழை தொடங்கி 10 நாள்கள் கடந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் இதுவரை போதிய மழை பெய்யவில்லை. கடந்த வாரம் வங்கக்கடலின் தென் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆந்திரத்துக்குச் சென்றதால் அங்கு கன மழை பெய்து, பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
ஆனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில்தான் கனமழை பெய்தது. இந்த நிலையில், குமரி கடல் அருகே உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையாவது தமிழகத்துக்கு அதிக மழை கொடுக்குமா என்று எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே உள்ளது.

No comments:

Post a Comment