Wednesday 26 June 2013

பொதுத் தேர்வுகளில் சாதனை படைத்தவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய முதல்வர்

தமிழகத்தில் நடைபெற்ற பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக முதல்வர் இன்று மடிக்கணினி வழங்கி பாராட்டினார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தலைமைச் செயலகத்தில், 2012-2013ஆம் கல்வியாண்டில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 201 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார் தமிழக முதல்வர்.
10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று, மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசு ரொக்க பரிசுகள் வழங்கி பாராட்டுவதோடு, அவர்களின் மேற்படிப்புகளுக்காகும் செலவினையும் அரசே ஏற்றுக் கொள்கிறது.
2012-2013ஆம் கல்வியாண்டில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற 9 மாணவிகள், இரண்டாம் இடத்தைப் பெற்ற 50 மாணவ மாணவிகள் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்ற 129 மாணவ மாணவிகள், என மொத்தம் 188 மாணவ மாணவிகள்; 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற 2 மாணவர்கள், இரண்டாம் இடத்தைப் பெற்ற 2 பேர் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்ற 9 மாணவ மாணவிகள், என மொத்தம் 13 மாணவ மாணவிகள்; என மொத்தம், 201 மாணவ மாணவிகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மடிக்கணினிகளை வழங்கியதோடு, “உங்கள் சாதனைகளைக் கண்டு உங்கள் பெற்றோர்கள் பெருமைப்படுவதைப் போல, தமிழக அரசும் குறிப்பாக நானும் உங்கள் சாதனைக்காக மிகவும் பெருமிதம் அடைகிறேன்; உங்கள் அனைவருக்கும் நல்ல ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்” என்று மனதார வாழ்த்தினார்.
முதல்வரிடம் இருந்து பாராட்டோடு, மடிக்கணினிகளையும் பெற்றுக் கொண்ட மாணவ, மாணவிகள் தங்களைப் பாராட்டி மடிக்கணினிகளை வழங்கி ஊக்குவித்தமைக்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment