Sunday 23 June 2013

திருத்தப்பட வேண்டியவர்கள்

சென்ற மாதம்  சென்னை பிராட்வேயில் உள்ள இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற  அருணாசாய்ராம் தமிழிசைக்கச்சேரி கேட்கப் போயிருந்தேன், நான் அருணாசாய்ராமின் தீவிர ரசிகன், சென்னையில் அவர்களது கச்சேரி எங்கே நடந்தாலும் போய்விடுவேன்,
அன்றைக்கு அரங்கு நிரம்பிய கூட்டம்,  ஒரு ரசிகர் எழுந்து சாய்பாபாவை பற்றி ஒரு பாட்டுப் பாட வேண்டும் என்று சப்தமாகக் கேட்டார்,  அருணா சாய்ராம் சிரித்தபடியே பார்க்கிறேன் என்று சொன்னார், அடுத்தபாடல் பாடி முடித்தவுடன் அதே ரசிகர் எழுந்து, சாய்பாபா பாட்டு என்று உரத்துக் கத்தினார்,
அருணாவிடம் அதே புன்னகை தான் மீண்டும் வெளிப்பட்டது, மூன்றாவது பாட்டு முடிந்தவுடன் அந்த நபர் எழுந்து கத்துவார் என்று மொத்த கூட்டமும் எதிர்பார்த்தது, அவர் இந்த முறை முன்வரிசைக்குப் போய் ஆத்திரமான குரலில் சாய்பாபா பாட்டு பாடியே ஆகணும் என்றார்
அந்தப் பாட்டின் பிரதி கைவசமில்லை என்று பதில் சொன்னார் அருணா சாய்ராம், அந்த நபர் விடுவதாக இல்லை, கத்திக் கொண்டேயிருந்தார், ஒட்டுமொத்த இசைநிகழ்வின் அமைதியை, அலாதியான அனுபவத்தை அந்த ஒரு நபர் தனது செயலால் முழுமையாகச் சிதறடித்துவிட்டார்,
இராஜா அண்ணாமலை மன்றத்தில் பாட்டுக் கேட்பது டூரிங் தியேட்டரில் அவதார் படம் பார்ப்பது போன்றது, பாடுகிறவர் கண்முன்னே தெரிவார், ஆனால் பாட்டு எங்கோ பல மைல் தூரத்தில் இருந்துகேட்பது போலிருக்கும்,
இத்தனை குளறுபடிகளையும் தாண்டிய மாயவசீகரம் அருணா சாய்ராமின் குரல், அது ஒரு தூய வெளிச்சம், அந்த வெளிச்சத்தில் நம்மைக் கரைத்துக் கொண்டுவிடுவது பாக்கியம்,
அருணா சாய்ராமின் புன்னகை அலாதியானது, பாடும் போது அவரது முகபாவங்களைப் பார்த்துக் கொண்டிருந்தால் அதில் தான் எத்தனை மாற்றங்கள்
பெருகிவிழும் அருவியின் அடியில் நிற்கும் போது ஏற்படும் பரவசமூட்டும் சிலிர்ப்பும், உடலற்றுப்போய் நீரோடு நீராகிவிடுவது போன்று உணர்வதும் அருணா சாய்ராம் பாடும் போதும் ஏற்படுகிறது,
காண வேண்டாமோ, இரு கண் இருக்கும் போது விண்ணுயர் கோபுரம் என்ற பாடல் எனக்கு விருப்பமான ஒன்று, அதை அருணா பாடும் போது மனது கனமேறி விம்மத் துவங்கிவிடுகிறது, என்னை விட என் மனைவி அருணா சாய்ராமினைத் தீவிரமாகக் கேட்பவள், ஆகவே அன்றைக்கு நாங்கள் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தோம்,
அப்போது எதிர்வரிசையில் இருந்த பெண்ணின் செல்போன் அடிக்கவே கவனம் கலைந்து திரும்பிப் பார்த்தேன், அந்தப் பெண்  பாடலுக்கு தலையாட்டியபடியே ஏதோ வேலை செய்து கொண்டிருப்பதைக் கவனித்தேன், என்ன செய்கிறார் என்று உற்றுபார்த்த போது பள்ளி பிள்ளைகளின் பரிட்சைப் பேப்பர்களைத் திருத்திக் கொண்டிருந்தார்.
எனக்கு திகைப்பாக இருந்தது, கஷ்டப்பட்டு மாணவர்கள் படித்து பரிட்சை எழுதித் தந்தால் அந்தப் பேப்பர்களை இப்படி அலட்சியமாக பாட்டுக் கேட்டுக் கொண்டு கடகடவென புரட்டி சிவப்பு மசிப் பேனாவால் மார்க் போடுகிறாரே என்று ஆத்திரமாக வந்தது,
அந்தப் பெண்ணிற்கு நாற்பது வயதிருக்க கூடும், நான் பார்ப்பதைக் கவனித்தபடியே புன்னகை செய்தார், அவரது மடியில் இன்னொரு பேப்பர் கட்டு பிரிக்கபடாமல் இருந்தது, பள்ளிமுடிந்து அப்படியே கச்சேரிக்கு வந்திருக்கிறார் என்பது புரிந்தது, இசையில் அவர் காட்டும் ஆர்வம் இவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்றால், மாணவர்கள் படிப்பு விஷயத்தில் மட்டும் ஏன் இத்தனை அலட்சியம், அந்தப் பெண் பேப்பரை விடுவிடுவென புரட்டி மார்க் போட்டபடியே ஆனந்தமாகத் தலையாட்டி பாட்டினை ரசித்துக் கொண்டிருந்தார்
பரிட்சை பேப்பரை இப்படி அவசர கோலத்தில் திருத்துவதைப் பார்த்த பிறகு என்னால் கச்சேரியைக் கேட்க முடியவில்லை, இத்தனை பேர் தன்னைப் பார்க்கிறார்களே என்று கூட அந்தப் பெண் கூச்சப்படவில்லை, அப்படியானால் இப்படி பேருந்து பயணத்தில், பூங்காவில், சினிமாத் தியேட்டரில், கச்சேரி நடுவில் பேப்பர் திருத்துவது ஒன்றும் தப்பில்லை என்று நினைக்கிறாரோ என்று மனது அந்தப் பிரச்சனையைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்த்து,
கச்சேரி முடிவதற்குள் அவர் இரண்டு கட்டுப் பேப்பரையும் திருத்தி முடித்திருந்தார்,  என்னால் அந்த செயலைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை, ஆசிரியர் பணியில் இருக்கும் எனது நண்பருக்கு உடனே போன் செய்து புலம்பினேன், அவர் சிரித்தபடியே சொன்னார்
இது ஒன்றும் புதியதில்லை சார், எனது நண்பர் ஒரு அரசுப் பள்ளியில் பணியாற்றுகிறார், அவர் தனது வகுப்பு மாணவர்கள் எழுதும் பரிட்சை பேப்பரை வீட்டில் கொண்டுவந்து போட்டுவிடுவார், பேப்பரைத் திருத்தி மார்க் போடுவது அவரது மனைவியின் வேலை, ஒரு நாள் அவர்கள் வீட்டிற்கு போயிருந்தேன், ஆறாவது வகுப்பு படிக்கும் மகள், பத்தாம் வகுப்பு பேப்பரை திருத்திக் கொண்டிருக்கிறாள், ஏன் சார் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்டதற்கு எந்த ஒரு மாணவனையும் நான் பெயில் ஆக்குவதில்லை, மற்றபடி இவ்வளவு பரிட்சைப் பேப்பர்களைத் திருத்த ஏது நேரம், அதான் இப்படி  என்று அமைதியாகப் பதில் சொன்னார்
இவராவது பரவாயில்லை, இன்னொரு ஆசிரியர் மாணவர்களின் பரிட்சை பேப்பர்களை பைக்கில் செல்லும் போது வழியில் எங்கோ தவறவிட்டுவிட்டார், அந்த ஐம்பது மாணவர்களுக்கும் அவருக்குத் தோன்றிய மதிப்பெண்ணை குத்துமதிப்பாகப் போட்டுவிட்டதோடு தலைமை ஆசிரியர் வசம் இந்தச் செய்தி போய்சேரவிடாமல் மாணவர்களை மிரட்டி ஒடுக்கிவிட்டார்,  இப்படி ஊருக்கு நூறு சம்பவங்கள் நடக்கின்றன என்றார்
பரிட்சைப் பேப்பர்களைத் திருத்துவதில் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் குளறுபடிகளைப் பற்றி அவர் பேசப்பேச எனக்கு ரத்தம் கொதிக்கத் துவங்கியது, அவர் சொன்னதில் பாதியை என்னால் நம்பவே முடியவில்லை, இவ்வளவு மோசமாகத் தான் நமது கல்வித்துறை செயல்படுகிறதா என்று ஆத்திரமாக வந்தது.
மறுநாள் எனக்கு தெரிந்த ஒரு பத்தாம் வகுப்பு மாணவனின் பரிட்சைப் பேப்பர்களை வாங்கிப் புரட்டிப்பார்த்தேன், ஒரே கேள்விக்கு இரண்டு முறை ஆசிரியர் மார்க் போட்டிருக்கிறார், ஒரு கேள்விக்கு மாணவன் எழுதிய பதிலைப் படிக்காமல் பத்திற்கு இரண்டு மதிப்பெண் போட்டிருக்கிறார், இத்துடன் அந்த பேப்பரில் யாரோ ஒருவரின் செல்போன் நம்பரை குறித்து வட்டம் போட்டு வைத்திருக்கிறார், இது தான் பரிட்சை பேப்பர் திருத்தும் லட்சணம் என்பது வருத்தம் தருவதாக இருந்தது,
அன்றிரவு எனக்குத் தெரிந்த பள்ளியின் தலைமை ஆசிரியருக்குப் போன் செய்து பரிட்சை பேப்பர் திருத்துவதன் பின்னுள்ள பிரச்சனைகளைப் பற்றிக் கேட்டபோது அவர் சிரித்தபடியே சொன்னார்
அது டீச்சரோட மனநிலையைப் பொறுத்தது சார், பலநேரங்கள் பதிலைப் படிக்காமலே மார்க் போட்ருவாங்க, மார்க் டோட்டல் போடுறதுல பலருக்கு பிரச்சனை, பத்து இருபது மார்க் விடுதல் வந்துவிடும், அதை மாணவர்கள் திருத்தச் சொன்னால் ஆசிரியர்கள் கோபப்படுகிறார்கள், இப்போது உள்ள பல ஆசிரியர்களுக்குச் சுத்தமாகப் பொறுமை கிடையாது, ஒன்றிரண்டு ஆசிரியர்கள் தான் மாணவர்கள் நலனில் உண்மையாக அக்கறை காட்டுகிறார்கள், மற்றபடி பேப்பர் திருத்தக் கிடைக்கிற காசுக்குத் தான் வேலை செய்கிறார்கள்,
பரிட்சைப் பேப்பர்களை எப்படித் திருத்துவது என்பதற்கு இவர்களுக்கு பயிற்சியே கிடையாது., அதற்கென ஆண்டிற்கு ஒரு முறை சிறப்பு பயிற்சிகள் ஏதாவது நடத்தலாம், அதைப்பற்றி  எல்லாம் கல்வித்துறையில் யாருக்கு அக்கறை இருக்கிறது என்று சலித்துக் கொண்டார்
அப்படியானல் மாணவர்கள் விழுந்துவிழுந்து படித்துப் பரிட்சை எழுதுவது வெறும் கண்துடைப்பு நாடகம் தானா என்று கேட்டேன்
அப்படி முழுமையாக ஒதுக்கிவிட முடியாது, தவறு சிஸ்டம் மீது இருக்கிறது, அதை சில ஆசிரியர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று கூறினார்,
எப்படி என்று கேட்டேன்
ஒரு வகுப்பிற்கு நூறு மாணவர்கள் வரை பள்ளி நிர்வாகம் சேர்த்துவிடுகிறார்கள், மாணவர்களின் பரிட்சைப் பேப்பரை ஆசிரியர் திருத்துவதற்கு போதுமான நேரம் அளிக்கபடுவதில்லை, பல தனியார் பள்ளிகளில் பரிட்சை நடந்த மறுநாளே பேப்பர் திருத்தித்தரப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள், பணிச்சுமை காரணமாக ஆசிரியர்களால் பேப்பர் திருத்துவதில் முழுமையாக ஈடுபடமுடியவில்லை, என்றார்.
இந்தப் பதில்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, நமது கல்விமுறையில் உடனடியாக மாற்றம் கொண்டுவர வேண்டியது பரிட்சைக்கு எப்படிக் கேள்விகள் கேட்பது, அதை எப்படித் திருத்துவது என்பதைப்பற்றியே,
இன்று நாம் நடைமுறையில் வைத்துள்ள பரிட்சை முறை மிகவும் அபத்தமான ஒன்று,
ஒரு மார்க், இரண்டு மார்க், ஐந்து மார்க், பத்து மார்க், வரைபடம், மனப்பாடப் பாட்டு என்று கேள்வி கேட்கும் வகைப்பாடு அரதப்பழைய முறை, பிரிட்டீஷ் கல்வியாளர்கள் அறிமுகப்படுத்திய முறையை அப்படியே நகலெடுத்து வருகிறோம், அத்துடன் இந்த முறையில் மாணவர்களின் கற்றல்திறனை முழுமையாக வெளிக்கொண்டுவர முடியாது,  இதனால் மாணவர்களை மனப்பாடம் செய்யும் இயந்திரமாக மாற்றி வருகிறோம்
சமீபமாக பிளஸ் 2 மாணவர்களுக்குக் காலாண்டு மற்றும் அரையாண்டு பரிட்சைகள்  மாநிலம் முழுவதும் ஒன்று போல நடத்தப்படுகின்றன, ஆனால் பெரும்பான்மை சிறுநகரங்கள், மற்றும் கிராமப்புறப் பள்ளிகளில் பரிடசைக்குரிய பாடங்களில் பாதி நடத்தபடாத காரணத்தால் மாணவர்கள் பொது கேள்விதாளைக் கண்டு மிரண்டு போய்விடுகிறார்கள்,
பொதுக் கேள்விதாளை அறிமுகம் செய்த அரசு பரிட்சைப் பேப்பரைத் திருத்துவதை உள்ளுக்குள்ளாகவே முடித்துக் கொள்கிறது, ஆகவே எந்த நோக்கத்திற்காக இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டதோ அது முழுமையாக நிறைவேற்றப்படவில்லை
பெரும்பான்மை பள்ளிகளில் தமிழ் இலக்கணம் கற்றுதரப்படுவதேயில்லை, ஆகவே மாணவர்கள் இலக்கணம் சம்பந்தமான கேள்விகளை அப்படியே மனப்பாடம் செய்து விழுங்கிக் கொள்கிறார்கள், அல்லது அந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் விட்டுவிடுகிறார்கள்,
பள்ளி ஆசிரியர்கள் பரிட்சைப் பேப்பர்களை முறையாக திருத்தியிருக்கிறார்களா என்று கவனிப்பதற்கு எந்தப் பள்ளியிலும் தனியாக ஒரு கமிட்டி இருப்பதாக நான் அறியவேயில்லை, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை இன்றைக்கும் ஆசிரியர்கள் உனது பிராக்டிகல் மார்க் எனது கையில் தானிருக்கிறது, என்னை முறைத்துக் கொண்டால் உனது படிப்பு காலி என்று எச்சரிப்பதை காண முடிகிறது
கல்வியை வணிகமாக்கிச் சீரழித்துவிட்ட சூழலில் பரிட்சை பேப்பர்களை திருத்துவதைப் பொழுதுபோகாமல் ஆடும் புதிர்விளையாட்டினைப் போல ஆசிரியர்கள் மாற்றிவருவது வேதனைக்குரிய விஷயம்,
இப்படி அலட்சியமாகப் பரிட்சை பேப்பர்களைத் திருத்தும் ஆசிரியர்களை எப்படி, யார் திருத்துவது என்றுதான் புரியவில்லை. ஆனால் இதை இப்படியே அனுமதித்தால் நமது கல்விமுறை முற்றிலும் நாசமாகிவிடும் என்பதை மட்டும் தெளிவாக உணர முடிகிறது.
••••

No comments:

Post a Comment