Tuesday 23 July 2013

ஆசிரியர்கள் லேப்-டாப் பயன்படுத்துவது கட்டாயம்: தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு-thinamalar seithi

கோவை: "அரசு நடுநிலைப்பள்ளிகளில், வாரத்துக்கு குறைந்தபட்சம் ஐந்து பாடவேளைகள் பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்ட "லேப்டாப்" அல்லது கம்ப்யூட்டர் பயன்படுத்தி பாடம் கற்பிக்கவேண்டும்" என்று ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தொடக்கக் கல்வித்துறைக்கு உட்பட்ட 8026 நடுநிலைப்பள்ளிகளுக்கு நான்கு கட்டங்களாக, மடிக்கணினிகள் மற்றும் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. 
மேலும், "அனைவருக்கும் கல்வி இயக்கம்" சார்பிலும் பள்ளிகளுக்கு கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்ட கணினிகள், அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மாணவர்களுக்கு கற்பித்தல் பணிக்கு ஆசிரியர்கள் பயன்படுத்துவது கிடையாது என்று புகார் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், மாணவர்களின் கற்பித்தல் பணிக்கு ஆசிரியர்கள் கட்டாயம் அரசு துறையால் வழங்கப்பட்ட கணினி, மடிக்கணினி பயன்படுத்த வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவுரைகள் பாடவாரியாக தொகுத்து முதன்மை கல்வி அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறையின் உத்தரவின்படி, வாரத்துக்கு குறைந்தது ஐந்து பாடவேளைகளில், குறுந்தகடுகள் துணையோடும், இணையதளங்களில் இருந்து பாடம் சார்ந்த வீடியோக்கள் மற்றும் பவர் பாயின்ட்டுகளை பதிவிறக்கம் செய்து 3டி, அனிமேஷன் உள்ளிட்ட முறைகளில், லேப்டாப் பயன்படுத்தி, ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கவேண்டும்.
கோவை மாவட்டத்தில், 244 நடுநிலைப் பள்ளிகளுக்கு மடிக்கணினி மற்றும் கணினி வழங்கப்பட்டுள்ளது. இக்கணினி பயன்பாடு கற்பித்தல் முறையில் கட்டாயம் என்ற தகவல் அனுப்பப்பட்டு பள்ளி கற்பித்தல் முறையை மாவட்ட தொடக்கல்வி அலுவலக மேற்பார்வையில் கண்காணிக்கப்படுகிறது. உணவு இடைவேளைக்கு முன்பு, அல்லது பின்பு உள்ள பாடவகுப்புகளை கணினி வழி கற்பித்தல் முறைக்கு பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment