Monday 22 July 2013

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: 1.59 லட்சம் பேர் எழுதினர்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வை தமிழகம் முழுவதும் 1.59 லட்சம் பேர் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) எழுதினர்.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 7,914 பேர் வரவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுக்கு ஒரு லட்சத்து 67 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக தமிழகம் முழுவதும் 421 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
சென்னையில் 12 ஆயிரத்து 908 பேர் இந்தத் தேர்வை எழுதினர். 1,019 பேர் தேர்வுக்கு வரவில்லை.
தமிழகம் முழுவதும் பெரிய அளவில் பிரச்னைகள் எதுவுமின்றி தேர்வு அமைதியாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ், வணிகவியல், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்கள் எளிமையாக இருந்ததாகவும், வரலாறு உள்ளிட்ட சில பாடங்கள் சற்றுக் கடினமாக இருந்ததாகவும் தேர்வர்கள் தெரிவித்தனர்.
சென்னையிலுள்ள டான்பாஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வை எழுதிய கல்யாணசுந்தரம் கூறும்போது, வணிகவியல் பாடத்தைப் பொருத்தவரை கேள்விகள் நேரிடையாகவும், எளிமையாகவும் இருந்தன. ஆனால், உளவியல் பாடத்தில் கேள்விகள் சற்றுக் கடினமாக இருந்ததாக தெரிவித்தார்.
வினாத்தாளில் பிழைகள்: தமிழ் பாட வினாக்களில் கால்டுவெல் என்பதற்குப் பதிலாக கல்டுவெல் என பிழையாக அச்சிடப்பட்டிருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். அதேபோல், உளவியல் பாடத்தில் நுண்ணறிவு ஈவு கணக்கீடு தொடர்பான விடைகள் அச்சுப் பிழையால் வெவ்வேறு வார்த்தைகள் இடம்பெற்றிருந்ததாகவும் தேர்வர்கள் தெரிவித்தனர்.
வணிகவியல் பாடத்தில் ஆங்கிலத்தில் இடம்பெற்றிருந்த வினா ஒன்று தவறாக இருந்ததாகவும் தேர்வர்கள் தெரிவித்தனர்.
வினாத்தாளைப் பதிப்பிக்கும்போது இந்த அச்சுப் பிழைகள் நேர்ந்திருக்கலாம். ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு இந்த வினாத்தாள்கள் திங்கள்கிழமைதான் கிடைக்கும். அதன்பிறகு, தேர்வு வாரியம் இந்தக் கேள்விகளைப் பரிசீலித்து மதிப்பெண் வழங்குவது தொடர்பாக முடிவு எடுக்கும். பிழைகளைப் பொருத்தவரை தேர்வர்களுக்குச் சாதகமாகவே முடிவு செய்யப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சைதாப்பேட்டையில்... சென்னை மேற்கு சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், பல தேர்வர்கள் சென்னை சைதாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தவறாக சென்றனர்.
அங்கிருந்து ஜோன்ஸ் சாலை தேர்வு மையத்துக்கு பலர் தேர்வு தொடங்கிய பிறகே வந்தனர். ஹால் டிக்கெட்டில் ஜோன்ஸ் சாலை என்று குறிப்பிட்டிருந்தால் குழப்பத்தைத் தவிர்த்திருக்கலாம் என தேர்வர்கள் தெரிவித்தனர்.
இதே தேர்வு மையத்தில், ஆவடியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு இரண்டாவது மாடியில் தேர்வு அறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தரைத்தளத்தில் இவருக்கு தேர்வறை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர் நிராகரித்துவிட்டதாக அவரது கணவர் புகார் தெரிவித்தார்.
தவிர்க்க முடியாத சூழலில் தேர்வு அறைகளை மாற்றி ஒதுக்கீடு செய்யலாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இது அந்த தேர்வு மைய அதிகாரியின் தவறுதான் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் திருச்சியிலும், செயலாளர் சபிதா சென்னையிலும் உள்ள தேர்வு மையங்களை ஞாயிற்றுக்கிழமை மேற்பார்வையிட்டனர்.
ஆகஸ்டில் தேர்வு முடிவு: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு விடைத்தாள்கள் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு ஸ்கேன் செய்யப்படும்.
ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு சரியான விடைகளை வைத்து விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகளை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment