Sunday 19 May 2013

பி.இ. விண்ணப்பத்துடன் மாற்றுச் சான்றிதழை இணைக்கத் தேவையில்லை

பி.இ. விண்ணப்பத்துடன் மாற்றுச்சான்றிதழை இணைக்கத் தேவையில்லை என்று அண்ணா பல்கலைக்கழக தாற்காலிக துணைவேந்தர் பி.காளிராஜ் கூறினார்.பி.இ. கலந்தாய்வின்போது மாற்றுச்சான்றிதழ் மற்றும் பிற அசல் சான்றிதழ்களைக் கொண்டுவந்தால் போதுமானது என்றும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
பி.இ. விண்ணப்பத்தில் கோரியுள்ள சான்றிதழ்கள் அனைத்தையும் கேட்டு வட்டாட்சியர் அலுவலகங்களில் மாணவர்கள் குவிந்துள்ளதாகத் தெரிகிறது. விண்ணப்பங்களைப் பெற்றவுடன் மாணவர்கள் அதில் வழங்கப்பட்டுள்ள குறிப்புகளை கவனமாகப் படிக்க வேண்டும்.
உதாரணத்துக்கு, தமிழ்நாட்டில் 8 முதல் 12 வரை படித்துள்ள மாணவர்களுக்கு இருப்பிடச் சான்றிதழ் தேவையில்லை. இந்தத் தகவல் விண்ணப்பத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழும் அனைவருக்கும் தேவையில்லை.
அந்தந்தப் பிரிவுக்குரிய மாணவர்களுக்கு தேவைப்படும் சான்றிதழ்களை மட்டும் விண்ணப்பதோடு இணைத்தால் போதுமானது. மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழோ, மாற்றுச்சான்றிதழோ இல்லையென்றாலும் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். கலந்தாய்வின்போது அவர்கள் அசல் சான்றிதழ்களை எடுத்துவந்தால் போதுமானது. சில அரிய சந்தர்ப்பங்களில் சான்றிதழ் கிடைக்கப்பெறாத மாணவர்களும் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 20-க்குள் சமர்ப்பித்துவிட வேண்டும்.
கலந்தாய்வுக்கு முன்னதாக அவர்களின் பதிவு எண்ணை குறிப்பிட்டு இந்தச் சான்றிதழ்களை மாணவர்கள், "செயலர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு'வுக்கு அனுப்பலாம்.
சி.பி.எஸ்.இ. மாணவர்கள்: பி.இ. விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க மே 20-ம் தேதி கடைசி நாளாகும். ஆனால், சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவு மே 20-க்குள் வெளியாக வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. எனவே, சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழின் நகலை மட்டும் மே 30-க்குள் நேரிலோ, தபால் மூலமோ சமர்ப்பித்தால் போதுமானது. பிற தகவல்கள் அடங்கிய விண்ணப்பங்களை அவர்கள் மே 20-க்குள் சமர்ப்பித்துவிட வேண்டும்.
ஜூன் 17-ல் விளையாட்டுப் பிரிவு கலந்தாய்வு: பி.இ. கலந்தாய்வில் விளையாட்டுப் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 500 இடங்களுக்கு ஜூன் 17-ம் தேதி கலந்தாய்வு தொடங்கும். ஜூன் 17 முதல் 19 வரை கலந்தாய்வு நடைபெறும். மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு ஜூன் 20-ம் தேதி நடைபெறும். பொது கலந்தாய்வு ஜூன் 21-ம் தேதி தொடங்கும்.
பொறியியலுக்குத் தேவையான கணிதம்: வரும் கல்வியாண்டில் பி.இ. படிப்பில் கணிதம், தொழில் திறன் மேம்பாடு ஆகியை பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பொறியியல் படிப்புகளுக்குத் தேவையான கணிதம் மட்டும் பி.இ., பி.டெக். முதலாமாண்டு மாணவர்களுக்கு மீண்டும் கற்றுத்தரப்படும். அவர்களுக்கான முதல் அகமதிப்பீட்டுத் தேர்வும் இந்த கணிதத்தில் இருந்துதான் இருக்கும்.
இதன் மூலம் மாணவர்கள் கணிதம், கணிதம் தொடர்பான படிப்புகளில் ஆர்வத்துடன் படிக்கலாம். பி.இ. மாணவர்களுக்கான தொழில் திறனை மேம்படுத்தும் வகையில் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். மாநிலம் தழுவிய அளவில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையில் ஒவ்வொரு மண்டல அளவிலும் வளாகத் தேர்வுகளுக்கு முக்கியத்துவம் ஏற்படுத்தப்படும், என்றார் காளிராஜ்.தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைச் செயலாளர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் உடனிருந்தார்.

No comments:

Post a Comment