Tuesday, 19 November 2013

இந்தியாவை வாசித்துப்பாருங்கள்

இந்தியாவின் அறிவியக்கத்தில் தீவிரமாக ஈடுபட்ட முன்னோடிகள் அனைவருக்கும் ஒரு பொதுத்தன்மை உண்டு. அவர்கள் எல்லாருமே ‘இந்தியாவைக் கண்டடைந்தவர்கள்’. தாங்களே இந்தியப் பெருநிலத்தில் அலைந்து திரிந்து தங்களுக்கென ஓர் இந்திய தரிசனத்தை அடைந்தவர்கள்.
துறவிகளின் பயணம்
இந்த மரபு இந்தியாவில் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. கபிலவாஸ்துவில் இருந்து கிளம்பி, இந்தியாவை நடந்தே அறிந்திருக்கிறார் புத்தர். தெற்கே கிருஷ்ணா நதிக்கரையில் அமராவதி வரை அவரது பாதங்கள் பட்டிருக்கின்றன. ஆதிசங்கரர் கல்வி முடிந்ததும் கையில் ஞானதண்டத்துடன் திக்விஜயம் புறப்பட்டு, வடக்கே பத்ரிநாத் வரை சென்று தன் குருகுலத்தை அமைத்திருக்கிறார். சைதன்ய மகா பிரபு வங்காளத்தில் இருந்து கிளம்பி, தென் எல்லையில் குமரி மாவட்டம் திருவட்டாறு வரை வந்திருக்கிறார். காஞ்சியில் பிறந்த பௌத்த ஞானியான திக்நாகர், நாளந்தாவின் ஞானகுருவாக இருந்திருக்கிறார்.
துறவிகளின் வாழ்க்கையில் இவ்வாறு இந்தியாவைத் தொட்டு அறிவதென்பது ஒரு நெறியாகவே இருந்திருக்கிறது. ‘பரிவ்ராஜக வாழ்க்கை’ என்று அதைச் சொல்கிறார்கள். சுவாமி விவேகானந்தர் இமயம் முதல் குமரி வரை வந்தது அவ்வாறுதான்.
காந்தி, தாகூர்
தென்னாப்பிரிக்காவிலிருந்து 1918-ல் இந்தியா திரும்பிய காந்தி செய்த முதல் விஷயம், மூன்றாம் வகுப்பு ரயில் பயணியாக இந்தியாவெங்கும் அலைந்து திரிந்ததுதான். அந்தப் பயணம் மூலம்தான் அவர் இந்தியாவைப் பற்றிய தன்னுடைய புரிதலை அடைந்தார். அவரது சத்தியசோதனையில் அந்தப் பயணத்தின் சித்திரம் உள்ளது.
ரவீந்திரநாத் தாகூர் இளம் கவிஞனாக, கன்னியாகுமரி வரை வந்திருக்கிறார். தாகூர் உலகையே அவ்வாறு சுற்றிப்பார்த்தவர். அன்று யாரும் போகாத அரபு நாடுகளுக்குக்கூடச் சென்றிருக்கிறார். அவரது எழுத்துக்களில் பயணக் கட்டுரைகள் மிகமிக முக்கியமானவை.
பெரும் பயணிகள் மூவர்
இந்தியாவின் தேசிய இயக்கத் தலைவர்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அந்தப் பயணங்கள் உருவாக்கிய பாதிப்பை நாம் விரிவாக ஆராய முடியும். அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவர்களில் மூன்று பேரை முன்னுதாரணமான பெரும்பயணிகள் என்று சொல்லலாம்.
காந்தியின் முதன்மைச் சீடர்களில் ஒருவரும் இந்தி, குஜராத்தி, மராத்தி மொழிகளில் முக்கியமான இலக்கியப் படைப்புகளை உருவாக்கியவருமான காகா காலேல்கர், இந்தியாவின் நீர்நிலைகள், ஆறுகள் மீது மீளாப் பிரியம் கொண்டவர். கங்கோத்ரி முதல் கூவம் வரை குளித்து அவர் எழுதிய கட்டுரைகள் ‘ஜீவன் லீலா’என்ற பெயரில் நூலாகியுள்ளன. தமிழிலும் இந்நூல் கிடைக்கிறது.
காந்தியின் சீடரும் பௌத்தப் பேரறிஞருமான டி.டி.கோசாம்பி இந்தியாவெங்கும் உள்ள கைவிடப்பட்ட பௌத்தத் தலங்களை முழுக்க அடையாளம் கண்டவர். தன் பயணங்களின் அடிப்படையில் அவர் எழுதிய ‘பகவான் புத்தர்’ ஒரு பெரும் படைப்பு. இதுவும் தமிழில் கிடைக்கிறது. தமிழ்ச் சிந்தனையின் முன்னோடிகளில் ஒருவரான அயோத்திதாசருக்கு நெருக்கமானவராக இருந்தவர் கோசாம்பி.
மூன்றாமவர், ராகுல சாங்கிருதியாயன். மார்க்ஸிய நோக்கில் இந்தியச் சிந்தனையைத் தொடங்கிவைத்தவர்களில் முன்னோடி. அவரது ‘வால்காவில் இருந்து கங்கை வரை’ இன்றும் மார்க்ஸியர்களின் அறிமுக நூலாக உள்ளது. ஊர்ஊராகச் சுற்றி இந்தியாவைப் பார்ப்பதைப் பற்றி அவர் எழுதிய ‘ஊர்சுற்றிப் புராணம்’ பயணம் செய்யும் மனநிலை கொண்டவர்களுக்கு ஒரு பெரிய தூண்டுதல் நூல்.
இலக்கியச் சிற்பிகளின் பயணங்கள்
இந்தியாவின் இலக்கியச் சிற்பிகளில் பலர் இந்தியாவை நடந்தே பார்த்தவர்கள். மலையாளப் பேரிலக்கியவாதியான வைக்கம் முகமது பஷீர் எட்டாண்டுகாலம் இந்தியாவைச் சுற்றிப்பார்த்தபடி அலைந்திருக்கிறார். சமையற்காரர், சோதிடர், நாட்டுமருத்துவர், கப்பல் கலாசி எனப் பல வேலைகளைச் செய்தபடி, அவர் செய்த அந்தப் பயணங்களே அவரை உருவாக்கின. ஞானபீடப் பரிசு பெற்ற மலையாள எழுத்தாளர் எஸ்.கெ. பொற்றேக்காட் பயண எழுத்தாளர் என்றே அறியப்பட்டவர்.
கன்னடத்தின் பெரும் படைப்பாளியான சிவராம காரந்த், பஷீரைப் போலவே அலைந்தவர். ‘பித்தனின் பத்து முகங்கள்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய சுயசரிதையில், தன்னை ஒரு தீராத பயணியாகவே முன்வைக்கிறார். வங்கப் படைப்பாளி தாராசங்கர் பானர்ஜியை நாகர்கோவிலில் ஒரு சாதாரணப் பயணியாகச் சந்தித்ததைப் பற்றி சுந்தர ராமசாமி ஒருமுறை சொல்லியிருக்கிறார்.
தமிழில் பயண இலக்கியம்
தமிழின் முதன்மையான பயணி என்றால், காந்தியைப் பற்றிய முதல் ஆவணப்படத்தை உருவாக்கிய ஏ.கே.செட்டியார்தான். அவர் உலகம் முழுக்கச் சுற்றியலைந்தவர். ‘குமரிமலர்’ என்ற இதழை நடத்திவந்தார்.
தமிழின் ஆரம்பகாலப் பயண இலக்கியங்களில் பகடாலு நரசிம்மலு நாயுடு எழுதிய ‘தென்னக யாத்திரை’முக்கியமானது. கோவை ஸ்டேன்ஸ் மில்லை உருவாக்கிய வர்களில் ஒருவரான நாயுடு, பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்தவர். இந்து ஞானமரபைத் தொகுத்து ‘ஹிந்து பைபிள்’என்ற தலைப்பில் இவர் எழுதிய நூல், இப்போது மறுபதிப்பாக வந்துள்ளது. சென்ற நூற்றாண்டில் கன்னியாகுமரியும் நெல்லையும் எப்படி இருந்தன என அவரது பயணக் கட்டுரைகள் காட்டுகின்றன.
தமிழிலக்கியத்தில் செயல்பட்ட முக்கியமான பயணிகள் என்றால், சிட்டியையும் இலங்கை எழுத்தாளர் சொ. சிவபாதசுந்தரத்தையும் சொல்லலாம். இவர்கள் இருவரும் இணைந்து எழுதிய ‘கௌதம புத்தர் அடிச்சுவட்டில்’புத்தர் வாழ்ந்த இடங்களை முழுக்கச் சென்று, பார்த்து எழுதப்பட்டது. தமிழ் இலக்கியவாதிகள் அதிகம் பயணம் செய்தவர்கள் அல்ல. விதிவிலக்கு தி.ஜானகிராமன். அவரும் சிட்டியும் இணைந்து எழுதிய ‘நடந்தாய் வாழி காவேரி’ குடகு முதல் பூம்புகார் வரை காவேரியின் கூடவே பயணித்து எழுதப்பட்ட நூல்.
தற்காலப் பயணிகள்
நவீன தமிழ் இலக்கியவாதிகளில் கோணங்கி, ராகுல்ஜி சொன்னதுபோல, தோளில் ஒரு பையுடன் எப்போது வேண்டுமென்றாலும் கிளம்பிச் செல்லக் கூடியவராகவே இருக்கிறார். ரூர்கேலாவின் துருப்பிடித்த இரும்பையும் ஹம்பியின் இடிந்த நகரையும் கோணங்கியின் எழுத்தில் நாம் காண்கிறோம். எஸ். ராமகிருஷ்ணன் தொடர்ந்து இந்தியாவெங்கும் பயணம் செய்து, அந்தப் பயணங்களைப் பற்றி பதிவு செய்யக்கூடியவர். அவரது ‘தேசாந்திரி’ என்ற நூல் பயணங்களைப் பற்றிச் சொல்லக்கூடியது.
என்னுடைய 20 வயதில் நான் வீட்டை விட்டுக் கிளம்பி, நாடோடியாக அலைய ஆரம்பித்தேன். சென்னையிலும் காசியிலும் ஹரித்வாரிலும் பல வகையான வாழ்க்கை வழியாகச் சென்றபின், ஒரு ஆண்டு கழித்துத் திரும்பி வந்தேன். மீண்டும் உடனே கிளம்பினேன். பழனி, திருவண்ணாமலை, காசி, பத்ரிநாத் எனப் பல ஊர்களில் பிச்சை எடுக்கும் துறவியாக ஒரு ஆண்டு இருந்திருக்கிறேன்.
இன்றும் நான் பயணிதான். சென்ற 20 ஆண்டுகளில் அநேகமாக ஆண்டில் ஒருமுறை ஒரு மாதம் இந்தியாவில் ஒரு நீண்ட பயணத்தை நான் மேற்கொள்வதுண்டு. முன்பு தனியாகச் சென்றேன். இப்போது நண்பர்களுடன் செல்கிறேன். இந்தியாவின் இயற்கைக் குகைகளுக்குள் நுழைந்து பார்ப்பதற்காக ஒரு பயணம் செய்தோம். ஈரோடு முதல் பாகிஸ்தான் எல்லை வரை அனைத்து சமண மையங்கள் வழியாகவும் பயணம் செய்தோம்.
மிகக் குறைந்த செலவில், தரையில் படுத்து, சாலையோரங்களில் சாப்பிட்டு, இந்தியக் கிராமங்கள் வழியாக நாடோடிகளாகப் பயணிப்போம். இந்தப் பயணங்களைத்தான் என் எழுத்து முளைத்தெழும் நாற்றங்கால்கள் என நினைக்கிறேன்.
இந்திய அரசியலை, சிந்தனையை, கலைகளை நீங்கள் அறிய வேண்டும் என்றால் தோளில் ஒரு பையுடன் கிளம்பிச்செல்லுங்கள். இந்த தேசம் ஒரு பிரமாண்டமான புத்தகம்.
- ஜெயமோகன், எழுத்தாளர், தொடர்புக்கு: jeyamohan.novelist@gmail.com

No comments:

Post a Comment