Tuesday 13 August 2013

மாணவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும்: பள்ளி நிர்வாகங்களுக்கு காவல்துறை அதிகாரிகள் அறிவுரை

மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகங்கள் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு தனியார் பள்ளியில் படித்த மூன்றரை வயது மாணவன் சில நாள்களுக்கு முன் பணத்துக்காக கடத்தப்பட்டான். காவல்துறையின் அதிரடி நடவடிக்கையால் அந்த மாணவன் மீட்கப்பட்டான்.
இந்தச் சம்பவத்துக்கு பின்னர் பள்ளிகளில் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு காவல்துறை வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் மாணவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பெருநகர காவல்துறையின் வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் பி.தாமரைக்கண்ணன் தலைமை வகித்தார்.
தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் ராஜேஷ்தாஸ், இணை ஆணையர் கே.சங்கர் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பெருநகரம் முழுவதும் இருந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றின் நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் சுமார் 200 பேர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பல்வேறு அறிவுரைகளை காவல்துறை அதிகாரிகள், பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கினர். குறிப்பாக பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு நிர்வாகங்கள் முழு பாதுகாப்பு அளிக்க முன் வர வேண்டும், மாணவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் வாகன டிரைவர்களை பற்றி நன்கு விசாரித்தே வேலைக்கு நியமிக்க வேண்டும், அனுமதிக்கப்பட்டவர்களை மட்டுமே பள்ளி வளாகத்துக்குள் வருவதற்கு அனுமதிக்க வேண்டும், அனுமதி இல்லாத நபர்களை வளாகத்தில் அனுமதிக்கக் கூடாது, மாணவர்களை பள்ளிக்கு அழைக்க வருகிறவர், சம்பந்தப்பட்ட மாணவனுடனும், அவர் பெற்றோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பள்ளி வைத்திருக்க வேண்டும், அழைக்க வருகிறவர்களுக்கு பள்ளி நிர்வாகம் அடையாள அட்டை வழங்கி இருக்க வேண்டும் என்று கூறினர்.
மேலும் ஒவ்வொரு வகுப்பு மாணவரையும், உரியவரிடம் ஒப்படைத்து அனுப்ப தனியாக ஓர் ஆசிரியரை நியமிக்க வேண்டும், பள்ளி வளாகம் முழுவதும் போதிய அளவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும், பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் பள்ளி நிர்வாகங்களுக்கு தேவையான உதவிகளை காவல்துறை செய்து கொடுக்கும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment